×

சபரிமலை பொன்னம்பல மேட்டில் அனுமதி இன்றி பூஜை: தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் மீது வனத்துறை வழக்கு

திருவனந்தபுரம்: பாதுகாப்பு மிகுந்த சபரிமலை பொன்னம்பல மேட்டில் தடையை மீறி தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் பூஜை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வனத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து சிறிது தொலைவிலுள்ள மலையில் பொன்னம்பல மேடு என்ற பகுதி உள்ளது. இங்குதான் மகரவிளக்கு பூஜை தினத்தன்று மகரஜோதி ஏற்றப்படும். முழுக்க முழுக்க கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. இங்கு கேரள மின்வாரியத்திற்கு சொந்தமான ஒரு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் மின்வாரிய ஊழியர்கள் கூட பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

செல்போன், கேமரா உள்பட எந்தப் பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இந்நிலையில் பாதுகாப்பு மிகுந்த இந்த பொன்னம்பல மேட்டில் தடையை மீறி தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் பூஜை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்து அறிந்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன், கேரளா டிஜிபி மற்றும் வனத்துறைக்கு புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து கேரள வனத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணசாமி என்பவர் தலைமையில் 5 பேர் பூஜை நடத்தியது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் இவர்கள் பொன்னம்பல மேட்டுக்கு சென்று பூஜை நடத்தியுள்ளனர்.

இதன் பின்னர் இன்று அவர்களில் யாரோ ஒருவர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியது: சபரிமலை ஐயப்பன் கோயிலின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
அதி பாதுகாப்பு மிகுந்த பொன்னம்பல மேடு பகுதிக்குள் நுழைந்து பூஜை நடத்தியது தங்களுக்குத் தெரியாது என்று வனத்துறை கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கேரள அரசிடமும் புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post சபரிமலை பொன்னம்பல மேட்டில் அனுமதி இன்றி பூஜை: தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் மீது வனத்துறை வழக்கு appeared first on Dinakaran.

Tags : Sabarimala Ponnambala ,Mound ,Forest department ,Tamil Nadu ,Thiruvananthapuram ,Sabarimala Ponnambala Mt. ,
× RELATED காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளது: வனத்துறை தகவல்